Sunday, September 19, 2010

ஒரே ஒரு முறை!

அழுத விழிகள் ஆறவிட்ட
  அமுத இதழின் முத்தங்களும்
பழுது பட்ட நெஞ்சுக்குள்
  பகர்ந்து வைத்த பாசங்களும்

மீண்டும் வேண்டி அலைகின்றேன்
  மீளா துயரில் தவழ்கின்றேன்
வேண்டும்போது கிட்டாமல்
  வேதனை தணலில் துவள்கின்றேன்

ஒருமுறை மீண்டும் வேண்டுமடி
  ஓய்ந்த உள்ளம் ஏங்குதடி
கருவிழி நடுவில் அரிக்குதடி
  காணதுடித்து கலங்குதடி

திருவுரு தேடி அலையுதடி
  தினமுன் நினைவில் கரையுதடி
வரும்வழி பார்த்து ஏங்குதடி
  வரங்களை வேண்டி காக்குதடி

மலர்ந்த உன்னில் நான்கூடி
  மகிழ்ந்து கிடந்தது அப்போது
உலர்ந்து போனது இதயம் தான்
  உள்ளம் எரியுது இப்போது

இதய சதையில் ஒரு பகுதி
  இற்று போனது என்னோடு
உதயம் என்பது எனக்கில்லை
  உதிரம் சொட்டுது கண்ணோடு

கண்ணின் திரையில் உருகாணும்
  கனவுகள் மட்டும் மறைவதில்லை
மண்ணின் ஆழம் செல்லாமல்
  மனதினில் அமைதி அமர்வதில்லை.

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்
குறையாத அதே
பகலிரவு தான் இன்றும்!

எனினும்

இன்றைய பகலின் பங்கை
இரவு திருடிகொண்டதொவென
இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது!


பட்டென முடிந்துபோன
பகலை விடவும்
பலவாறாய் நீளுமிரவு
படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்து பார்த்தும்
வானம் விடிந்திருக்கவில்லை


யார் யாரோ கல்லெறிந்து
கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்
கவிதை பொழிந்தாய்

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்
விளங்கிக்கொண்டது என் தவறு தான்!


சரி

எப்போது விடியும் என் வானம்?

Saturday, September 4, 2010

மரித்தவன் உயிர்த்தேன்

முகம் பார்ப்பதும் - அதிலுன் அகம் பார்ப்பதும் - இந்த
யுகம் முழுவதும் - உன்னால்
சுகம் காண்பதும்

    கனவுகளாய் வந்ததுண்டு என்னில் - ஆனால்
    கதையாகி போனதவை பின்னில்!
***
கண்வைப்பதும் - என்மேல்
மண்வைப்பதும் - வெந்த
புண்மீது தீயை
பெண்வைப்பதும்

    எத்தனை நாட்கள் தான் போகும் - இங்கே
    என்னுயிர் தாபத்தில் வேகும்!
***
மோகங்களே - சுகத்தின்
போகங்களோ? - என்னை
நாகங்களாய் - கொல்லும்
யாகங்களோ?

    ஒருபோதும் அடங்காத நெஞ்சும் - அடி
    ஓயாமல் உன்மனதை கெஞ்சும்!
***
பூவைத்தபின் - நெஞ்சில்
தீவைப்பதா? - அந்த
தீவைப்பதும் - பெண்ணே
நீவைப்பதா?

    நிச்சயம் நானன்று மரித்தேன் - நிலவே
    நினைவினில் நீவந்தாய் உயிர்த்தேன்!

Wednesday, June 16, 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அன்பென்ற சொல்லுக்கு
அடிமை செய்தல் என்றுமா அர்த்தம்?

நேசித்து கொல்லுவதை
நேரில் அனுபவித்த வலி.

கண்ணை தின்று
கண்ணனை கொன்று
களியாட்டம் ஆடும் வெறி

வாழ்வை தொலைக்க
காட்டிய ஆர்வம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Wednesday, June 9, 2010

மீண்டும் ஒரு வசந்தம்!

கனவுகள் கலைத்தது
கதவுடைக்கும் சப்தம்!

வாசல் தாண்டி வந்தது
வார்த்தைகள் அற்ற மவுனம்!

மவுனத்தின் பேரிரைச்சலில்
மனவோசையின் மரணம்!

எதிர்த்தோடிய திசையில் என்
எதிர்காலம்!

எல்லாம் களைத்த ஏகாந்த பொழுதில்
வந்து சேர்ந்ததொரு 
வசந்தம்!

Tuesday, May 11, 2010

தோல்வி

நிழலை தேடி சென்றவன்
நிராசையோடு திரும்புகிறேன்!

பாலையை வெல்ல சென்றவன்
பாவமாய் திரும்புகிறேன்!

நன்னம்பிக்கை முனை தேடி சென்றவன்
நசிந்த நினைவோடு திரும்புகிறேன்!

தன்னம்பிக்கை தேடி சென்றவன்
தகர்ந்து போய் திரும்புகிறேன்!

தோல்விகளை வெற்றி கொள்ள சென்றவன்
வெற்றிகளை தோல்விக்கு தந்து திரும்புகிறேன்!

எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து சென்றவன்
ஏமாற்றங்களின் ஏகாந்தத்தில் திரும்புகிறேன்!

Wednesday, April 28, 2010

அதிசயம்!

எதிர்பார்ப்பது
ஏமாறுவது
வழக்கம் எனக்கு!

ஏக்கம் தருவது
துக்கம் தருவது
வழக்கம் உனக்கு!

****

அதிசயமாய்
அன்றொருநாள்
அள்ளியெடுத்து
அளப்பரிய முத்தம் தந்தை
நெற்றி முதல் - என்
நெஞ்சு வரை!
****

ஆதவன் மறைந்து
அந்தி சாய்ந்ததும்
அடித்து ஓய்ந்தது - ஓர்
அடைமழை!

அந்த
அதிசயம் கண்டு!

Thursday, April 22, 2010

மின்னல் தருணங்கள்!

கூடல் மாநகர்...

கூடு போன்ற அறை...

இருபக்கம் ஜன்னல்

மறுபக்கம் வைகை...

மடிகிடக்க நீ...

தலைகோத நான்...

முயங்கி முடிகையில் முடிந்த இரவு...



கொங்கு தேசம்

மலைக்கோவில் சாலை

குதிரை போன்றொரு வண்டி

பின்னிருக்கையில் நீ

அணைத்து பிடித்த உன் கை

என் தோள் தாங்கிய உன் தாடை

உன் மூச்சு சுடும் நெருக்கம்

ஒருக்களித்த வண்டி

சாய்ந்து திரும்புகையில்

எதிர்பாராமல் - உன் முத்தம்..



உச்ச கோபம்...

ரவுத்திர வெறி...

கத்தி தீர்த்தபின் கண்டேன் - உன்

கன்னத்தில் கண்ணீர்..

உதடு துடிக்க உன் விம்மல்..

நாராசமான உன் நிசப்தம்...

கலவரமான உன் விழிகள்...

அத்தனையையும் சிந்தாமல்

அள்ளி எடுத்த என் உள்ளங்கை..

அள்ளி கொடுத்த உன் உதடுகள்...



வெண்பனி சிகரம்

உடல் துளைக்கும் குளிர்

குளிர் தடுக்கும் கம்பளி

கம்பளி கடக்கும் காற்று

நடக்க முடியாத நடுக்கம்

விலக நினைக்காத நெருக்கம்

உன் கைகள் கோர்த்த வெப்பம்

மலை சாலை நடந்த இன்பம்

வளவளவென்ற உன் பேச்சு

கலகலவென்ற உன் சிரிப்பு

உன் தோள் தட்டி சென்ற மேகம்

என் மேல் முட்டி நின்ற மோகம்



சந்தோஷ காலை

அரவமற்ற வேளை

வெதுவெதுப்பான குளியல்

கதகதப்பான காப்பி

தலை துவட்டிய துப்பட்டா

இருவருக்குமாக ஒரு தட்டில் தோசை

உன் கையால் பசியாறிய நாம்



பேசி தீர்த்த மாலை

அகல் விளக்கு வெளிச்சம்

மடி புரண்ட நீ

மனம் புரண்ட நான்

செல்ல சீண்டலில் - என்

உதடு கிழித்த உன் நகம்

உடனே அதை வெட்டிய உன் சினம்..



கனவுகளில் சின்டெரெல்லா..

உதட்டு சிரிப்பால் உறக்கம் கலைந்த நீ...

ஆச்சரியாமாய் கேட்ட என் கனவு கதை...

சின்டெரெல்லா மீதான் உன் ஆத்திரம்...

என் நெஞ்சேறி கிடந்துறங்கிய மிச்ச இரவு!



காங்கரீட் காடு..

கட்டு கட்டாக வீடு..

சமையலறையில் என் யுத்தம்

தள்ளி நின்று ரசிக்கும் உன் சத்தம்..

கஞ்சியான பிரியாணி..

கேலி செய்த உன் சிணுங்கல்..

தலை குனிந்த நான்.

உச்சந்தலையில் உன் முத்தம்...



கால் கொத்தும் கடல்

மலையாள மணல்

விரல் கோர்த்து நீ

விழி கோர்த்து நான் !

உனக்கோ

அலை நனைக்க பயம்

கரை மீளவும் பயம்

தொட்டு செல்லும் நுரை

அதை மட்டும் ரசித்த உன் முகம்..

உன்னை அள்ளியெடுத்து கடல் செல்கையில்

அச்சம் கொண்ட உன் அலறல்...

திரும்ப திரும்ப புரண்ட உன் திமிறல்...

கடல் குளித்த நீ...

அச்சம் தெளிந்த முகம்..

என் நெஞ்சில் குத்தி

நீ இட்ட செல்ல சண்டை...

என்னை அழைத்து கடல் புகுந்த

உன் ஆர்வம்..

Friday, March 12, 2010

எங்கே போய் முடியும்?

எல்லாம் முடிந்து போனவொரு
ஏகாந்த மாலையில்
ஏக்கங்கள் தீராத
ஏலாத விழிகளில் -
மிச்சமிருப்பதாய் தோன்றவில்லை
வாழ்க்கையும்
நம்பிக்கையும்!

*****

ஏமாற்றங்கள் மட்டுமே
எதார்த்தமாகிப்போன
என் வாழ்வில்
ஏதேனும் ஒரு
பேராச்சரியம் நிகழாதாவெனும்
நப்பாசை கூட காலாவதியாகி போய்விட்டது!

*****

உதாசீனப்படுத்துவோரையும்
உள்ளத்துள் நேசிப்பதால்
நெஞ்சுக்குள்ளே - இப்போது - இட
நெருக்கடி!

Sunday, February 28, 2010

நசிந்த நம்பிக்கைகள்!

வாழ்வை ரசித்தது ஒரு காலம்
வசந்தம் தேடியது ஒரு காலம்
தாழ்வை நோக்கிய என் வாழ்வு
தளர்ந்து போனது சில காலம்

"ஞாலம் துலக்க போகின்றேன்
ஞானம் தேடி போகின்றேன்
காலம் முழுதும் வாழும்
கவிதை தேடி போகின்றேன்" (என)

புலம்பி திரிந்தது ஒரு காலம்
புகழ்ச்சி ருசித்தது ஒரு காலம்
கலகம் தெளிந்தது ஒரு காலம்
கனவுகள் கலைந்தது ஒரு காலம்

காதல் ரசித்தது ஒரு காலம்
காற்றை ரசித்தது ஒரு காலம்
சாதல் கூட ரசிக்க தக்கது
சரியாய் கண்டது இக்காலம்

அமுதினும் இனிது உலகறிவேன்
அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்
சமுத்திரம் மோதும் கரையோரம்
சவமாய் ஒதுங்க துடிக்கின்றேன்!

Thursday, February 18, 2010

எப்போது தெளிவேன்?

மழைக்காக காத்திருக்கையில்
ஒரு வழியாக
திரண்டது மேகம்!

என்னை நோக்கி சிந்திய ஆறுதல் துளிகள்
என்னை அடையும் முன்பே ஆவியாகின!

எப்போது உணர்வேன்
நான் பாலை என?
என் வெப்பமே என் எதிரி என?

Wednesday, February 3, 2010

உன்னை நனைத்த நிலவு

விரல் கோர்த்தபடி
வீதியுலா சென்றதில்லை

மடி கிடத்தி
மனம் விட்டு பேசியதில்லை

உருண்டை பிடித்து
உணவு ஊட்டிவிட்டதில்லை

கண்ணீர் தருணங்களில்
கட்டி அணைத்து ஆறுதல் சொன்னதில்லை

தோள் சாய்ந்தபடி
தூர பயணம் செய்ததில்லை

உனதுள்ளம் எனக்காவென
உறுதியாக தெரியவுமில்லை

எனினும் இந்த இரவில்
எங்கேயோ உன்னையும் நனைக்கிறது
என்பதாலேயே
நின்று ரசிக்கிறேன் - இந்த
நிலவை!

இன்னொரு சந்திப்பு

நன்றாடிய வீதிகள்..
நின்றோடிய நாட்கள்..
கொண்டாடிய தினங்கள்..
சென்றோடிய கணங்கள்..

எல்லாம் பேசி தீர்த்த பின்

இறக்கி வைக்கப்பட்டதொரு
இனிய முத்தம்

தொடங்கி வைக்கப்பட்டதொரு
தொன்மை யுத்தம்

******

உன் ஸ்பரிசம் உன் இளமை சொன்னது
உன் வயது உன் முதுமை சொன்னது

இன்னொன்றுக்காக
இமை மூடி
நின்றபோது

உனக்கான மலர்ப்பாதை உன்னையும்
எனக்கான சவக்குழி என்னையும்
விடாமல்
விளித்துக்கொண்டிருன்தது
வினையாலணையும் கருவியால்

*****

விடை பெற்றோம் மீண்டும்
இன்னொரு பிரிவு!

Sunday, January 17, 2010

இணையாத இதையங்கள்

அடுத்த
அறையில்
அயர்ந்து உறங்குகிறது - என்
அரைக்கால் நூற்றாண்டு காதல்!

இதையத்தில்
இமையத்தை ஏற்றி வைத்து
இந்த அறையில்
இமை மூடாதிருக்கிறேன்
இந்த
இரவில்!

இருவர்க்கும்
இடையேயான
இடைவெளியாய்
இருந்துகொண்டிருப்பது - வெறும்
சுவர் மட்டுமே தானா??

இணையாத
இதையங்கள் கொண்ட உடல்கள்
இணைவதேயில்லை ஒருபோதும்!

Thursday, January 7, 2010

பேராசை

உள்ளம் உடைந்து போகும்போதெல்லாம்
உனது சில வார்த்தைகளில்
உண்டாகும் ஆறுதல்...

விழிகளில் வழியும் முன் - உன்
விரல்சுண்டி மரிக்கும் கண்ணீர்...

ஒவ்வொரு விடியலிலும்
ஓரளவேனும் அமைதி...

இதையத்திலேப்போதும்
இருக்கை இட்ட நீ..

துக்கம் தகர்க்கும் பொழுதுகளில் - உன்
துளிர்மடி கிட்டும் சாந்தி..

நட்ட்று வீழும் வேளை - கொஞ்சம் உன்
நம்பிக்கை வார்த்தைகள்..

இவை மட்டுமே எனக்கு
நிரந்தரமாகிவிடக்கூடாதா??

******  *********  **********  **********

எழுதப்பட்ட நாள்: 17-09-2000

கண்ணீர் தருணங்கள்

விழித்து பார்க்கும்
விடியல் ஒவ்வொன்றிலும் - நான்
விசாரிக்கப்படாமல் போகையிலும்..

இரவை கடத்த
இயலாத - என்
இற்றுவிட்ட  
இதையம்
இறந்துவிடுமோ - என
இமைகள் துடிக்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்
கண்டதுண்டு!

****

என்
பாச வேர்கள்
பட்டுபோகையிலும்
சுவாச மண்டலம்
சுட்டு போதையிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

தாங்க முடியாத தோல்விகளை - நான்
சந்திக்க நேர்கையிலும்
தூங்க முடியாத இரவுகளில் - நான்
சிந்திக்க முயலுகையிலும்

நான் நிராகரிக்கப்படும்
எல்லா நிமிடங்களிலும்
நான் சந்தேகிக்கப்படும்
எல்லா வினாடிகளிலும்

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****

என்
வாழ்வின் முன்னுரையை
வாசிக்க நேர்கையிலும்
என்
தாழ்வின் காரணீயர்களை
தரிசிக்க நேர்கையிலும்..

கண்ணீரின் கனத்தை - நான்

கண்டதுண்டு!

****
எனினும்..
இன்று சிந்தப்பட்ட கண்ணீரின்
அடர்த்தியும் கனமும்
அதிகரித்திருப்பதற்கு
அடியேன் மட்டுமே காரணமல்ல!

**********   **********   **********
எழுதப்பட்ட நாள்: 06.12.1999
எழுதப்பட்ட இடம்: கோவை

Monday, January 4, 2010

இவளுக்கு புதிரென்று பேர்!

அவளுக்கு இலக்கியம் தெரியாது!

இவளுக்கு
இலக்கிய ஆசிரியர்களின்
அகரவரிசையே அத்துப்படி!
*****
அவளுக்கு நவீனத்துவம் புரியாது!

இவளுக்கு
பின் நவீனத்துவம் கூட
பிரபலம்!
*****
அவளுக்கு பயணங்கள் பிடிக்காது!

இவளுக்கு
மாநிலத்தின் நீள அகலங்கள்
நினைவறைகளை
நிறைத்து நிற்கும்!
*****
அவளுக்கு தனிமை ஆகாது!

இவளுக்கு
பெருங்கூட்டம், உறவுகள், கலகலப்பு
உன்மத்தம்!
*****
அவளுக்கு
என்னை திகட்ட திகட்ட
நேசிக்க தெரிந்திருக்கிறது!

இவளுக்கு???

Sunday, January 3, 2010

உயிர்த்திருத்தலின் வலி

நினைவுகள் பகிர்ந்து கொண்டேன் - சில
நிஜங்களை உணர்ந்து கொண்டேன்!
பனைமரம் போலே வளர்ந்தும் - நான்
பக்குவம் இல்லை கண்டேன்!

விழிகளில் கண்ணீர் துளிகள் - பெரும்
விரைவிலே வழிய நின்றேன்!
மொழிகளில் சொல்லா துயரம் - என்
மோனத்தில் உரைத்து நின்றேன்!

போனவை போன பின்பும் - நான்
போக்கற்று போய்விட வில்லை!
ஆனது ஆனது என்று - என்னை
ஆறுதல் செய்திட வில்லை!

இன்பமும் துன்பமும் வாழ்வில் - என்றும்
இருபக்கம் என்றே சொல்லி
துன்பத்தை ஏற்று கொள்ளும் - பெரும்
துயரத்தை பழகி கொண்டேன்!

துன்பமும் துன்பமே அல்ல - ஒரு
துப்பின்றி தோற்ற முயற்சி!
வன்மமும் கோபமும் இன்றி - நல்
வாழ்வுக்கு ஆன பயிற்சி!

என்பதை கண்டு கொண்டும் - நான்
இழந்ததை எண்ணி நொந்தேன்!
என்பதால் என்ன செய்தேன் - நான்
இன்னமும் உயிர்த்து நின்றேன்.