Sunday, September 19, 2010

ஒரே ஒரு முறை!

அழுத விழிகள் ஆறவிட்ட
  அமுத இதழின் முத்தங்களும்
பழுது பட்ட நெஞ்சுக்குள்
  பகர்ந்து வைத்த பாசங்களும்

மீண்டும் வேண்டி அலைகின்றேன்
  மீளா துயரில் தவழ்கின்றேன்
வேண்டும்போது கிட்டாமல்
  வேதனை தணலில் துவள்கின்றேன்

ஒருமுறை மீண்டும் வேண்டுமடி
  ஓய்ந்த உள்ளம் ஏங்குதடி
கருவிழி நடுவில் அரிக்குதடி
  காணதுடித்து கலங்குதடி

திருவுரு தேடி அலையுதடி
  தினமுன் நினைவில் கரையுதடி
வரும்வழி பார்த்து ஏங்குதடி
  வரங்களை வேண்டி காக்குதடி

மலர்ந்த உன்னில் நான்கூடி
  மகிழ்ந்து கிடந்தது அப்போது
உலர்ந்து போனது இதயம் தான்
  உள்ளம் எரியுது இப்போது

இதய சதையில் ஒரு பகுதி
  இற்று போனது என்னோடு
உதயம் என்பது எனக்கில்லை
  உதிரம் சொட்டுது கண்ணோடு

கண்ணின் திரையில் உருகாணும்
  கனவுகள் மட்டும் மறைவதில்லை
மண்ணின் ஆழம் செல்லாமல்
  மனதினில் அமைதி அமர்வதில்லை.

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்
குறையாத அதே
பகலிரவு தான் இன்றும்!

எனினும்

இன்றைய பகலின் பங்கை
இரவு திருடிகொண்டதொவென
இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது!


பட்டென முடிந்துபோன
பகலை விடவும்
பலவாறாய் நீளுமிரவு
படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்து பார்த்தும்
வானம் விடிந்திருக்கவில்லை


யார் யாரோ கல்லெறிந்து
கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்
கவிதை பொழிந்தாய்

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்
விளங்கிக்கொண்டது என் தவறு தான்!


சரி

எப்போது விடியும் என் வானம்?

Saturday, September 4, 2010

மரித்தவன் உயிர்த்தேன்

முகம் பார்ப்பதும் - அதிலுன் அகம் பார்ப்பதும் - இந்த
யுகம் முழுவதும் - உன்னால்
சுகம் காண்பதும்

    கனவுகளாய் வந்ததுண்டு என்னில் - ஆனால்
    கதையாகி போனதவை பின்னில்!
***
கண்வைப்பதும் - என்மேல்
மண்வைப்பதும் - வெந்த
புண்மீது தீயை
பெண்வைப்பதும்

    எத்தனை நாட்கள் தான் போகும் - இங்கே
    என்னுயிர் தாபத்தில் வேகும்!
***
மோகங்களே - சுகத்தின்
போகங்களோ? - என்னை
நாகங்களாய் - கொல்லும்
யாகங்களோ?

    ஒருபோதும் அடங்காத நெஞ்சும் - அடி
    ஓயாமல் உன்மனதை கெஞ்சும்!
***
பூவைத்தபின் - நெஞ்சில்
தீவைப்பதா? - அந்த
தீவைப்பதும் - பெண்ணே
நீவைப்பதா?

    நிச்சயம் நானன்று மரித்தேன் - நிலவே
    நினைவினில் நீவந்தாய் உயிர்த்தேன்!