Monday, March 23, 2009

மழைகொள்ளும் சுகம்

மத்தியான வேளையிலே

மரம்பூத்த சாலையிலே

மனிதரற்ற நேரத்திலே

மழைகொள்ளும் சுகம் துறந்தால்

மனிதனாகி என்ன பயன்?

*****

ஆடி மாத முதல் மழையில்

அங்கம் அது நனைவதனை

அணுஅணுவாய் ரசிக்காமல்

அணில்குஞ்சாய் ஒதுங்கிநின்றால்

அறிவிருந்து என்ன பயன்?

*****

மழைத்துளிகள் முகம்கொள்ள

மழைசாரல் மனம்கொள்ள

மகிழ்ச்சியிலே உடல்துள்ள

மறுத்துவிட்டு மறைந்து நின்றால்

மனசிருந்து என்ன பயன்?

Tuesday, March 17, 2009

ஆசீர்வதிக்கப்படலாகாதா?

சிறுபிள்ளை தனமான

சிந்தனைகளால்

சிதைந்தது

சிந்தை!

இனி

பல விஷயங்களுக்கு - என்னை

பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்!

*****

உன்னை அடிக்கடி - என்

உள்விழிகள் காண முடியாமல் போகலாம்...

உள்ளத்து உணர்வுகளை

உரையாடி தீர்க்கமுடியாமல் போகலாம்...

அவஸ்த்தை நிமிடங்களில் - உன்

ஆறுதல் கிட்டாமல் போகலாம்...

இக்கட்டான பொழுதுகளில் - உன்

ஆலோசனைகளையோ

அறிவுரைகளையோ

அளிக்கப்படாமல் போகலாம்...

அன்னியோன்னியத்தில் இருந்து

அன்னியத்திற்கும் - ஒரு

அகதியை போல - நான்

அகற்றப்பட நேரலாம்...

paarththe தீரவேண்டுமென

பார்வை அரித்தால்

தெருவில் எங்கேனும் இருந்து

நீயறியாதுனை

தரிசித்துக்கொள்ள நேரலாம்...

எல்லாவற்றுக்கும் - எனை இனி

பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்!

*****

ஒரேயொரு ஆறுதல்!

என்றேனும் - நான்

ஆசீர்வதிக்கப்படும் ஒரு நன்னாளில்

நினைவுகள் திரட்டி - அரைநிமிடம்

நீ என்னை

நலம் விசாரிக்கவும் கூடும்!

*****

திங்களில் - ஒரே ஒரு

தினமெனும்

ஆசீர்வதிக்கப்படலாகாதா?

தானத்தில் சிறந்தது?


றப்பை நோக்கி

சென்றுகொண்டு இருந்தான் - அவன்!


குருதி - அவனை

குளிப்பாட்ட தயாராக

உத்திர துவங்கி விட்டிருந்தது!


சட்டென்று ஏற்பட்ட ஒரு

சாலை விபத்தில்

மரணத்தில் இருந்து விடுபட

மன்றாடிக்கொண்டு இருந்தான்!


அவன்

உயிர்பயம் தெளிகையில்

தெய்வமாய் தெரிந்தவன்

மருத்துவனல்லன்

முகம் தெரியாத யாரோ?


தன் குருதி தந்து

உயிர் தந்தவன்

உரு காட்டாமல் சென்றுவிட்டான்.


ரத்த தானம் நன்று!


*****


ரத்தம், எலும்பு மஜ்ஜை, சதை

இவைகளுக்கெல்லாம் - ஒரு

இயல்பு உண்டு.


தானம் செய்தபின்னும்

அவைகளை நாம் இழப்பதில்லை.


இழந்ததை அவைகளே

ஈட்டி விடுகின்றன


இரண்டாவது சிருநீரகம்

ஒரு தற்காப்பு..

அது அத்தனை அவசியமல்ல

அறிவேன்.


எனில்...


தானத்தில் சிறந்தது?


இழந்தால் கிடைக்காத

விழியும் இதயமும்.


****


எனக்கும் உடன்பாடுதான்


என்

உடலுறுப்புக்கள் அத்தனையையும்

தானம் செய்ய..

இதயம் தவிர.


ஏனெனில்


என்னுடையதை மட்டும் தானே

என்னால்

தானம் செய்ய முடியும்??

Monday, March 16, 2009

மீண்டும் மீண்டும் வா!

பவுர்ணமி நனைக்கும் இரவோடு
பட்டினி கொல்லும் உணவோடு
மவுனம் வழியும் இசையோடு
மடியில் உறங்க நீ வேண்டும்!
*****
வெப்பம் கொல்லும் கோடை
வேர்வை கசியும் வாடை
நுட்பம் போல நெஞ்சுள்
நுஜைந்து அடங்க நீ வேண்டும்!
*****
திவலை கண்ணீர் தேக்கி
தெறித்து வீழும் நேரம்
கவலை கறைகள் நீக்கி
கதற உன்மடி வேண்டும்!
*****
நெருப்பு நதியில் நீந்தி
நெஞ்சம் எரியும் வேளை
இருப்பு கொள்ளா இதயம்
ஏங்கி தவிக்கும் வேளை
*****
ஆறுதல் படுத்தி போகும்
அமுத விழிகள் வேண்டும்
மீறுதல் தவறே இல்லை
மீண்டும் நீயே வேண்டும்!

Sunday, March 15, 2009

பழகி கொள்வாயா

பரவும் மழையில் நனைய - என்
பணிநிலை மறுக்கும் போதும்
உறவும் ஊரும் என்னை - சற்று
உதறி தள்ளும் போதும்


விழிகள் கசியும் போதும் - இதயம்
விதிர வலிக்கும் போதும்
பழிகள் சுமந்த நெஞ்சில் - கொஞ்சம்
பதற்றம் நிறையும் போதும்

வாழ்வின் அவலம் தீர்க்க - நல்ல
வழியில்லை என்றே நாளும்
பாழ்மனம் வெம்பி வீழ்ந்து - நான்
பதறி தவிக்கும் போதும்

இயல்பாய் இயங்கி வர
பழகி கொள்வாயா என் சுவாசமே?

Saturday, March 14, 2009

ஏன் தாமதம்!

நான் நஞ்சை

நீ மேகம்

பொழிவதாக சொல்லி சொல்லி

போய்க்கொண்டே இருக்கிறாய்

பொழியாமலே....

என்றேனும் - நீ

பொழிய நினைக்கையில்

ஒருவேளை - நான்

பாலையாகி இருக்க கூடும்!

*****

என்னை சங்கடப்படுத்துவதில் எல்லாம்

சந்தோஷப்பட்டு கொண்டே இருக்கிறாய்

என்றேனும் - என்னை

சந்தோஷப்படுத்த விரும்புகையில்

ஒருவேளை

நானில்லாது - நீ

சங்கடப்பட்டிருக்க கூடும்!

*****

என் எல்லா தவங்களுக்கும்

சாபங்களையே தந்துகொண்டு இருக்கிறாய்.

என்றேனும் - நீ

வரம் தர நினைக்கையில்

தவமாயிருந்த நான்

சவமாயிருக்கக்கூடும்!

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்

குறையாத அதேபகலிரவு தான் இன்றும்


எனினும்

இன்றைய பகலின் பங்கை

இரவு திருடிக்கொண்டதொவென

இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது.

பட்டென முடிந்துபோன

பகலை விடவும்

பலவாறாய் நீளுமிரவு

படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்துப்பார்த்தும்

வானம்விடிந்திருக்கவில்லை!

யார்யாரோ கல்லெறிந்து

கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்

கவிதை பொழிந்தாய்.

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்

விளங்கி கொண்டதென் தவறு.


சரி...

எப்போது விடியும் என் வானம்??