Sunday, August 30, 2009

செத்துவிடட்டுமா??

குழப்பம் மிஞ்சும் வேளைகளில்

கோதும் விரல்கள் கிடைப்பதில்லை!

மழையாய் விழுந்து அழுவதற்கோ

மடிகள் எதுவும் கிடைப்பதில்லை!

ஆறுதல் வரிகள் மொழிவதற்கு

அதரம் ஏதும் கிடைப்பதில்லை!

மாறுதல் வேண்டும் மனதுக்கு

மருந்தாய் எதுவும் தெரிவதில்லை!


பயணம் எங்கே புரியவில்லை

பயத்தை விலக்க தெரியவில்லை

சயனம் இல்லா இரவுகளில்

சங்கடம் மட்டும் தீரவில்லை


நெஞ்சம் வலிப்பது தனிப்பதற்கே

நெருங்கிய தோழியர் எவருமில்லை

கொஞ்சம் கொஞ்சம் ஆறுதலை

கொடுக்கும் மகளிர் யாருமில்லை


துக்கம் துடைக்க யாருமில்லை

துயரம் சொல்ல யாருமில்லை

பக்கம் தோளில் சாய்ந்தபடி

படுத்து அழவே எவருமில்லை


கண்ணீர் வற்றும் காலைகளில்

கனிமொழி சொல்ல யாருமில்லை

தண்ணீர் அகன்ற மீனாய் நான்

தவிப்பது யாருக்கும் புரியவில்லை

....

....

காதல் ரசித்தது ஒருகாலம்

காமம் சுகித்தும் ஒருகாலம்

சாதல் கூட ரசிக்கத்தக்கது

சரியாய் உணர்ந்தது இக்காலம்


என்றோ எனக்குள் நம்பிக்கை

எரிந்தகாலம் தெரிகிறது

இன்றோ மனதில் மரணத்தின்

இனிய காட்சி விரிகிறது


சமுத்திரம் மோதும் கரையோரம்

சவமாய் ஒதுங்க தவிக்கின்றேன்

'அமுதினும் இனியது உலக'றிவேன்

அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்!!