Wednesday, October 19, 2016

நடவு செய்த நம்பிக்கைகள்

தொலைத்தது தெரியும்
தொலைத்த இடமும் தெரியும்

தேடத்தான் முயலவில்லை

நானே விரும்பி இழந்த என் சுயத்தை

***

நான் சுவாசிக்கும் இந்த காற்றில் எங்கோ இருக்கும் உன் சுவாசமும் கலந்திருக்கக்கூடும் என்கிற நம்பிக்கையே போதும்...நான் உயிர்த்திருக்க..

***
பல தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் நான் 'படிப்பினை' என பெயரிட்டு வைத்திருக்கிறேன், என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள

***

தன்னை தானே தேநீரில் கரைத்தழித்து தேநீரை சுவையாக்கும் சர்க்கரைபோல. .என்னில் கரைந்து என்னை வாழவைக்கிறது உன் நினைவு

***
என்றேனும் ஒருநாள் என் மன உணர்வுகள் புரிந்துகொள்ளப்படக்கூடும் என்பது கூட ஒருவகையில் மூடநம்பிக்கையின்பாற் படும்

***

எல்லா எதிர்பார்ப்புகளும் பொய்த்துப்போனபின்னாலும், மீண்டும் நடவுசெய்து காத்திருக்கிறேன், நம்பிக்கை நாற்றுகளை...இதுவும் பொய்க்கும்வரை.

Saturday, October 1, 2016

வலி மிகுந்ததிவ்வாழ்வு

எதனாலும் எரித்துவிட முடியாததாயிருக்கிறது
நம்மை பற்றிய என் நினைவுகளும்
உன்னை பற்றிய என் புரிதலின்மையும்

வேறொரு பாதையில் வெகு தூரம் பயணித்த பின்னால் தான் பழைய வழி மீதான பிரியம் அதிகரிக்கிறது... திரும்பி வர இயலாத ஒரு வழி பாதை இது என்பது புரியாமல்

துரோகங்களை சுமந்து செல்கிறேன்... பாவங்களை அதன் இலவச இணைப்பாய்...

என்றேனும் ஒருநாள் எங்கேனும் இறக்கிவைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு

அத்தனை அன்னியோன்னியமாய் வளைய வந்த இப்பெரு நகரில் இப்படி அனாதையாய் சுற்றித்திரிகையில் தான் மரணம் எத்தனை உன்னதமானது என புரிகிறது

விழிகளை வீசி வீசி நடக்கிறேன்... ஏதேனும் ஒரு சாலையின் ஏதேனும் ஒரு கூட்டத்தினிடையே உனது முகமும் இருந்துவிடலாகாதா எனும் ஏக்கத்துடன்

நன்றாடிய சாலைகளில் இன்றோடுகையிலெல்லாம் வெறுமையாய் இருக்கும் என் வலது கை கேட்கிறது...இணை கை எங்கே என

விரட்டி விட்டாலும் வெகு தூரம் பறந்த பின்னும் நம்மையே தேடி வரும் வீட்டுப்புறா போலாகிவிட்டது மனது...உன் நினைவுகளையே தேடி தேடி வருகையில்

கைவரப்பெற்றவை எல்லாம் சாபங்கள் என உணரத்துவங்குகையில் அனிச்சையாய் மனம் தெளிந்து கொள்கிறது, நாம் முன்பு வீசி எறிந்தது தான் நமக்கான வரமா? என

மன்னிக்கப்படுதலுக்கான யாசிப்பில் காத்திருந்த காலங்களில் மன்னிப்பதற்கான எனது வாய்ப்பை எங்கேயோ தொலைத்துவிட்டிருக்கிறேன்

சில பொய்களை காப்பாற்றிக்கொள்வதற்காக... பொய்களையே வாழ்க்கையாய் அணிந்து கொண்டிருப்பது கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது
இப்படியாக...

உன்னை நினைக்கக்கூடாது என்று தான்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நானும்

Tuesday, March 10, 2015

பறக்கத்துடிக்கும் பறவைநானோர் பறவை

சுதந்திரமாய் சிறகுவிரித்து
பறக்கத்துடிக்கும் பறவை

*****
மிக நீண்ட சிறகுகளுண்டு
என்னிடம்

கிரணங்களை தடுத்து
கிரகணங்களை உருவாக்கி
கிரகங்களை கடந்து, எனை
அழைத்துச்செல்லும்
வலிமையுள்ள சிறகுகள்

பறத்தலின்
பரிணாமங்களையும்
பரிமாணங்களையும்
படித்து பதியமிட்டு
பயிற்சி செய்த
பழக்கமுமுண்டு

எனினும்,

எதேச்சையாய் சிறகுயர்த்த
எத்தனிக்கையிலெல்லாம்
ஏனோ மறந்துபோகிறேன்

என்
கால்களை பிணைத்திருக்கும்
கற்பாறைகளை

***** 
சிறகுகளை சிலநிமிடம்
சடசடத்தபடி

நின்ற இடத்திலேயே
நின்றபடி
நின்றுகொண்டிருக்கிறேன்

நானே விரும்பி
பிணைத்துக்கொண்ட பாறையின்மேல்

விடுபட முயலாமலும்
விடுபட முடியாமலும்

Saturday, August 31, 2013

அன்பால் அழிந்தவன்


எனக்கும் உனக்குமான உறவை..

உதாசீனம் செய்வதே

உன் உள்ளம் மட்டும் தான்!

பூங்கொத்துக்களோடு வரவேற்கவேண்டியவள்

பூத கணங்களோடு எதிர்கொள்கிறாள்

அன்பால் செய்யவேண்டியதை எல்லாம்

அகங்காரத்தால் செய்து தொலைக்கிறாள்

தன்னை நோக்கி

தாவி வரும் மழை துளியை –

பாலைவனம் –

தன் வெப்பம் கொண்டு

தானே கொல்வது போல;

உன்னை நோக்கி வரும்போதெல்லாம் –

உடைத்து விளையாடுகிறாய் –

உணர்விழந்த என் உள்ளத்தை!

ஒளிமயமாக திகழவேண்டிய என் வாழ்வு –

உன்னால் –

பழிமயமாக படர்ந்து நிற்கிறது

மகிழ்ச்சிக்கும் உண்டோர் மரணதினம் –

எனின் –

இகழ்ச்சிக்கு உண்டோ ஒரு இறந்ததினம்?

என்னை நோக்கும் எல்லா இதழ்களிலும் –

புகழ்ச்சிக்கு பதில் இகழ்ச்சியே.. உட்கார்ந்திருக்கிறது...

இறுமாப்புடன்

அன்பால் அழிந்தவனுக்கு –

அடியேன் மட்டுமே ஆதாரம்!

தொழுபவனும், நிந்திப்பவனும் கடவுளையே

சதா சர்வ காலமும் நினைத்து கொண்டிருப்பது மாதிரி

எனக்கு

எப்போதுமே உன் ஞாபகம் தான்....

ஞாபகம் என்பது பயத்தின் மறுபெயர் ஆனால்!

Wednesday, May 15, 2013

வண்ணத்துப்பூச்சி!


 

 
வண்ணச் சிறகடித்து வண்ணத்து பூச்சியொன்று

  வட்டமிட்டு வட்டமிட்டு வளையவரப் பார்த்தவுடன்

எண்ணச் சிறகொடிந்து; எந்தன் நிலைமறந்து

  எகிறித் தாவியதை என்னிடத்தேக் கொண்டுவந்தேன்!

 

புள்ளிக் கோலமெல்லாம் பூஞ்சிறகு ஓரத்திலே

  பூப்பூவாய் தூவிவைத்து பூமியிலே விதைத்தவன்யார்?

பள்ளிச் சோலையில்தன் பட்டுமலர் சிறகடித்து

  பறந்துவரும் ஜீவனிடம் பக்குவமாய் கேட்கின்றேன்!

Saturday, May 11, 2013

நம்பிக்கை


காரிருள் யாமத்தில் தனிமையின் தணலுக்குள்

ஓரிதழ் உதிர்த்தாள் பெண் – யாரிவள்

விண்கொண்ட கலைவடிவோ பூவோ எனவியக்க

கண்வீசி செய்தாள் சதி!

 

முழுமதி முகங்கண்டு இரவினை வீண்செய்து

கழுவிலே வாடியதென் நெஞ்சம் – புழுதி

போகாத சாலையென ஆனதடி சிந்தை

நோகாத உன்சிரிப்பு கண்டு!

 

விழியின் கணையோடு மனம்கொள் வாளொன்று

பழியாக தாக்கியதை எண்ணி – குழியில்

வீழ்கின்ற வெள்ளமென பாய்கின்ற ஆசைகளும்

பாழ்பட்டு போனதடி நேற்று!

 

மனக்கதவை தட்டுதற்கு மல்லிகை நீவரவில்லை

எனக்கதனால் உயிரில்லை என்றேன் – தினமுன்

முகம்பார்க்கும் வரம்கிட்டின் மகிழ்வேன், சொர்க்க

அகம்பார்த்த ஆத்திகனாய் நான்!

 

வளையோசை ஒலிக்கின்ற கனவுகளை நானினிமேல்

களையவே முடியாத நிலைவருமோ – விளையாடும்

மான்கூட்டம் மீதினிலே புலிபாய்ந்த நிலைபோலே

நான்கொண்ட உயிர்கொள்ளும் அச்சம்!

 

மூண்டெழும் காமத்தை முன்னின்று தடுத்தங்கு

மீண்டெழும் அலையாக ஆனேன் – தீண்டாமல்

நீசெல்ல, துடிக்கின்ற சின்னமனம் நிகராகும்

தீசெல்ல வழியாகும் தளிர்!

 

ஓவியமே உயிர்த்தாற்போல் ஏந்திழைநீ தவழ்ந்திங்கு

காவியமே நடத்துகிறாய் கண்ணில் – பூவிரியும்

ஓசையினை கேட்பதற்கு இயலுமோ பெண்ணழகே

ஆசயினை அடக்கியதென் உயிர்!

 

குழலவிழ்த்து நகைபுரிந்து ஆறா என்மனத்

தழலவித்து கனியீவாள் காணீர் – பிழறாது

பத்தியம் நீக்கிப்பின் நீங்கா நிலைகொண்டு

சத்தியமாய் சொல்வாள் கவி!


 

Friday, November 23, 2012

பயணம்

கைபிடித்தபடி எங்கேயோ
என்னை கடத்தி செல்லுகிறது
காலம்!
நான் செய்த
நன்மைகளுக்கான
நன்றியறிவித்தலுக்காகவோ;
இதுவரையும்
தப்பித்துவந்த – என்
தவறுகளுக்கான
தண்டனைகளுக்காகவோ!
 
வற்றிப்போன கண்களோடும்
மரத்துப்போன மனதோடும்
பயணித்தபடி இருக்கிறேன்,
இலக்கோ
இலட்சியமோ
இல்லாமல்!

நீட்டித்துக்கொடுக்கப்படும்
நாட்கள் ஒவ்வொன்றும்
நிதர்சனமாய் சொல்லுகின்றன,
எனக்கான நாட்கள்

எதற்காகவோ இன்னமும்
மிச்சமிருந்து தொலைப்பதை!