Sunday, February 28, 2010

நசிந்த நம்பிக்கைகள்!

வாழ்வை ரசித்தது ஒரு காலம்
வசந்தம் தேடியது ஒரு காலம்
தாழ்வை நோக்கிய என் வாழ்வு
தளர்ந்து போனது சில காலம்

"ஞாலம் துலக்க போகின்றேன்
ஞானம் தேடி போகின்றேன்
காலம் முழுதும் வாழும்
கவிதை தேடி போகின்றேன்" (என)

புலம்பி திரிந்தது ஒரு காலம்
புகழ்ச்சி ருசித்தது ஒரு காலம்
கலகம் தெளிந்தது ஒரு காலம்
கனவுகள் கலைந்தது ஒரு காலம்

காதல் ரசித்தது ஒரு காலம்
காற்றை ரசித்தது ஒரு காலம்
சாதல் கூட ரசிக்க தக்கது
சரியாய் கண்டது இக்காலம்

அமுதினும் இனிது உலகறிவேன்
அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்
சமுத்திரம் மோதும் கரையோரம்
சவமாய் ஒதுங்க துடிக்கின்றேன்!

Thursday, February 18, 2010

எப்போது தெளிவேன்?

மழைக்காக காத்திருக்கையில்
ஒரு வழியாக
திரண்டது மேகம்!

என்னை நோக்கி சிந்திய ஆறுதல் துளிகள்
என்னை அடையும் முன்பே ஆவியாகின!

எப்போது உணர்வேன்
நான் பாலை என?
என் வெப்பமே என் எதிரி என?

Wednesday, February 3, 2010

உன்னை நனைத்த நிலவு

விரல் கோர்த்தபடி
வீதியுலா சென்றதில்லை

மடி கிடத்தி
மனம் விட்டு பேசியதில்லை

உருண்டை பிடித்து
உணவு ஊட்டிவிட்டதில்லை

கண்ணீர் தருணங்களில்
கட்டி அணைத்து ஆறுதல் சொன்னதில்லை

தோள் சாய்ந்தபடி
தூர பயணம் செய்ததில்லை

உனதுள்ளம் எனக்காவென
உறுதியாக தெரியவுமில்லை

எனினும் இந்த இரவில்
எங்கேயோ உன்னையும் நனைக்கிறது
என்பதாலேயே
நின்று ரசிக்கிறேன் - இந்த
நிலவை!

இன்னொரு சந்திப்பு

நன்றாடிய வீதிகள்..
நின்றோடிய நாட்கள்..
கொண்டாடிய தினங்கள்..
சென்றோடிய கணங்கள்..

எல்லாம் பேசி தீர்த்த பின்

இறக்கி வைக்கப்பட்டதொரு
இனிய முத்தம்

தொடங்கி வைக்கப்பட்டதொரு
தொன்மை யுத்தம்

******

உன் ஸ்பரிசம் உன் இளமை சொன்னது
உன் வயது உன் முதுமை சொன்னது

இன்னொன்றுக்காக
இமை மூடி
நின்றபோது

உனக்கான மலர்ப்பாதை உன்னையும்
எனக்கான சவக்குழி என்னையும்
விடாமல்
விளித்துக்கொண்டிருன்தது
வினையாலணையும் கருவியால்

*****

விடை பெற்றோம் மீண்டும்
இன்னொரு பிரிவு!