குழப்பம் மிஞ்சும் வேளைகளில்
கோதும் விரல்கள் கிடைப்பதில்லை!
மழையாய் விழுந்து அழுவதற்கோ
மடிகள் எதுவும் கிடைப்பதில்லை!
ஆறுதல் வரிகள் மொழிவதற்கு
அதரம் ஏதும் கிடைப்பதில்லை!
மாறுதல் வேண்டும் மனதுக்கு
மருந்தாய் எதுவும் தெரிவதில்லை!
பயணம் எங்கே புரியவில்லை
பயத்தை விலக்க தெரியவில்லை
சயனம் இல்லா இரவுகளில்
சங்கடம் மட்டும் தீரவில்லை
நெஞ்சம் வலிப்பது தனிப்பதற்கே
நெருங்கிய தோழியர் எவருமில்லை
கொஞ்சம் கொஞ்சம் ஆறுதலை
கொடுக்கும் மகளிர் யாருமில்லை
துக்கம் துடைக்க யாருமில்லை
துயரம் சொல்ல யாருமில்லை
பக்கம் தோளில் சாய்ந்தபடி
படுத்து அழவே எவருமில்லை
கண்ணீர் வற்றும் காலைகளில்
கனிமொழி சொல்ல யாருமில்லை
தண்ணீர் அகன்ற மீனாய் நான்
தவிப்பது யாருக்கும் புரியவில்லை
....
....
காதல் ரசித்தது ஒருகாலம்
காமம் சுகித்தும் ஒருகாலம்
சாதல் கூட ரசிக்கத்தக்கது
சரியாய் உணர்ந்தது இக்காலம்
என்றோ எனக்குள் நம்பிக்கை
எரிந்தகாலம் தெரிகிறது
இன்றோ மனதில் மரணத்தின்
இனிய காட்சி விரிகிறது
சமுத்திரம் மோதும் கரையோரம்
சவமாய் ஒதுங்க தவிக்கின்றேன்
'அமுதினும் இனியது உலக'றிவேன்
அதைத்தான் நானும் வெறுக்கின்றேன்!!
5 comments:
//சாதல் கூட ரசிக்கத்தக்கது//
`ரசிக்கத்தக்கது' - ஓசை நீளுகிறது.
`காதல் கூட ரசிப்பதற்கே' என்றோ `காதல் ரசிக்கத் தக்கதுதான்' என்றோ மாற்றலாம்.
கவிதை நன்று; வாழ்த்துகள்.
அ. நம்பி
ஏன் இவ்வளவு சோகம் :(
உங்கள் கவிதை உணர்வுகளைத் தொடுகிறது.
"செத்துவிடட்டுமா"
வேணாமே :(
இன்னும் நிறைய எழுதுங்க :)
நம்பி,
அங்கே ஓசை நீளுவதை நானும் அறிவேன்..
எனினும் சொல்லிசை அழகு கெடக்கூடாது என்பதற்காகவே அங்கே அந்த மருவை அனுமதித்தேன்..
"காதல் கூட ரசிக்க தக்கது" என சொல்லும்பொழுது தொனிக்கும் அழுத்தத்திற்காகவே அது அப்படியே இருக்கட்டும் என நினைத்தேன்..
சுட்டி காட்டியமைக்கு நன்றி!
உங்கள் விமரிசனங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
சக்திபிரபா,
காதல் தருகிற வலியின் கொடுமை தான் இப்படி கேட்க வைத்தது!
நிறைய எழுதுகிறேன்... மரபு வழி கவிதைகள் மரணப்படுக்கைக்கு போகாமல் மலரவேண்டும் என்பது என் மனதின் ஆவல்களுள் ஒன்று.. எனவே தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன்!
வெறுமையின் உச்சத்தில், தோள்சாய தோழியர் யாரும் அற்ற அத்துவானத்தில், துக்கம் தொண்டை அடைக்க, நேசம் நெஞ்சை அடைக்க வெளிப்படுத்தி கதற வேறு யாருமற்ற நேரத்தில் "செத்துவிடட்டுமா" என்று தான் கேட்க தோன்றியது எனக்கு!
Yes, I admire this… But need not be sooo sad…. Your well wishers are always around you, whom you can easily reach…
All the best….
Post a Comment