எதனாலும் எரித்துவிட முடியாததாயிருக்கிறது
நம்மை பற்றிய என் நினைவுகளும்
உன்னை பற்றிய என் புரிதலின்மையும்
வேறொரு பாதையில் வெகு தூரம் பயணித்த பின்னால் தான் பழைய வழி மீதான பிரியம் அதிகரிக்கிறது... திரும்பி வர இயலாத ஒரு வழி பாதை இது என்பது புரியாமல்
துரோகங்களை சுமந்து செல்கிறேன்... பாவங்களை அதன் இலவச இணைப்பாய்...
என்றேனும் ஒருநாள் எங்கேனும் இறக்கிவைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு
அத்தனை அன்னியோன்னியமாய் வளைய வந்த இப்பெரு நகரில் இப்படி அனாதையாய் சுற்றித்திரிகையில் தான் மரணம் எத்தனை உன்னதமானது என புரிகிறது
விழிகளை வீசி வீசி நடக்கிறேன்... ஏதேனும் ஒரு சாலையின் ஏதேனும் ஒரு கூட்டத்தினிடையே உனது முகமும் இருந்துவிடலாகாதா எனும் ஏக்கத்துடன்
நன்றாடிய சாலைகளில் இன்றோடுகையிலெல்லாம் வெறுமையாய் இருக்கும் என் வலது கை கேட்கிறது...இணை கை எங்கே என
விரட்டி விட்டாலும் வெகு தூரம் பறந்த பின்னும் நம்மையே தேடி வரும் வீட்டுப்புறா போலாகிவிட்டது மனது...உன் நினைவுகளையே தேடி தேடி வருகையில்
கைவரப்பெற்றவை எல்லாம் சாபங்கள் என உணரத்துவங்குகையில் அனிச்சையாய் மனம் தெளிந்து கொள்கிறது, நாம் முன்பு வீசி எறிந்தது தான் நமக்கான வரமா? என
மன்னிக்கப்படுதலுக்கான யாசிப்பில் காத்திருந்த காலங்களில் மன்னிப்பதற்கான எனது வாய்ப்பை எங்கேயோ தொலைத்துவிட்டிருக்கிறேன்
சில பொய்களை காப்பாற்றிக்கொள்வதற்காக... பொய்களையே வாழ்க்கையாய் அணிந்து கொண்டிருப்பது கொஞ்சம் பாரமாகத்தான் இருக்கிறது
இப்படியாக...
உன்னை நினைக்கக்கூடாது என்று தான்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நானும்