Friday, November 23, 2012

பயணம்

கைபிடித்தபடி எங்கேயோ
என்னை கடத்தி செல்லுகிறது
காலம்!
நான் செய்த
நன்மைகளுக்கான
நன்றியறிவித்தலுக்காகவோ;
இதுவரையும்
தப்பித்துவந்த – என்
தவறுகளுக்கான
தண்டனைகளுக்காகவோ!
 
வற்றிப்போன கண்களோடும்
மரத்துப்போன மனதோடும்
பயணித்தபடி இருக்கிறேன்,
இலக்கோ
இலட்சியமோ
இல்லாமல்!

நீட்டித்துக்கொடுக்கப்படும்
நாட்கள் ஒவ்வொன்றும்
நிதர்சனமாய் சொல்லுகின்றன,
எனக்கான நாட்கள்

எதற்காகவோ இன்னமும்
மிச்சமிருந்து தொலைப்பதை!

 

Thursday, March 3, 2011

இறந்துவிடாதிருக்கிறேன்

உயிர்த்திருக்கிறேன்
உன் நினைவுகள் சுமந்து - இந்த
ஊருணி வீட்டில்!

எரிக்கப்படாத - உன்
இறந்தகாலம்
எரித்துக்கொண்டிருக்கிறது
என்
எதிர்காலத்தை

பங்கு வைக்கப்பட்ட - உன்
பாசம்
பரிகாசம் செய்கிறதென்னை

காரணமும் இன்றி
காதலும் இன்றி - ஓர்
கற்பனா உறவில்
காலம் கழிக்கின்றேன்

நேசிக்கப்படாத - என்
நேசமும்
யோசிக்கப்படாத - என்
யோகமுமாய்..
வெறுமையில்
வழுக்குகிறது - என்
வாழ்க்கை

என்றேனும் - உனக்குள்
எனக்காகவும் ஓர்
எச்சம் உருவாகும்
எனும்
எதிர்பார்ப்புக்களுடனும்
ஏமாற்றங்களுடனும்

இப்படியாக 

இன்னமும்
இறந்துவிடாதிருக்கிறேன்

இறந்த கால இனிய நினைவுகள் மட்டுமே
இறுக்கிப்பிடித்தபடி!

Wednesday, March 2, 2011

முற்றுப்புள்ளியை நோக்கி

நிழலை தொடர்ந்து சென்றவன்
நிராசையோடு திரும்புவதை போல...
செந்தழலை தின்று செரித்தவன்
தண்ணீரை தவிர்ப்பது போல

என்னில் இருந்து நானே பிரிகிறேன்!

கண்ணாடியை காயப்படுத்தாமல்
பிரியும் பிம்பம் போல..
கிளைக்கு வலிக்காமல்
உதிரும் இல்லை போல...

***

முற்றுப்புள்ளிகள் எல்லாம்
கால்புல்லிகலாகும்
காலகட்டத்தில்.. இந்த
கால்புள்ளி,
முற்றுப்புள்ளியை நோக்கியே
முன்னேறுகிறது..

சில கால் புள்ளிகளின்
கால அளவை நீட்டிக்க!

Sunday, September 19, 2010

ஒரே ஒரு முறை!

அழுத விழிகள் ஆறவிட்ட
  அமுத இதழின் முத்தங்களும்
பழுது பட்ட நெஞ்சுக்குள்
  பகர்ந்து வைத்த பாசங்களும்

மீண்டும் வேண்டி அலைகின்றேன்
  மீளா துயரில் தவழ்கின்றேன்
வேண்டும்போது கிட்டாமல்
  வேதனை தணலில் துவள்கின்றேன்

ஒருமுறை மீண்டும் வேண்டுமடி
  ஓய்ந்த உள்ளம் ஏங்குதடி
கருவிழி நடுவில் அரிக்குதடி
  காணதுடித்து கலங்குதடி

திருவுரு தேடி அலையுதடி
  தினமுன் நினைவில் கரையுதடி
வரும்வழி பார்த்து ஏங்குதடி
  வரங்களை வேண்டி காக்குதடி

மலர்ந்த உன்னில் நான்கூடி
  மகிழ்ந்து கிடந்தது அப்போது
உலர்ந்து போனது இதயம் தான்
  உள்ளம் எரியுது இப்போது

இதய சதையில் ஒரு பகுதி
  இற்று போனது என்னோடு
உதயம் என்பது எனக்கில்லை
  உதிரம் சொட்டுது கண்ணோடு

கண்ணின் திரையில் உருகாணும்
  கனவுகள் மட்டும் மறைவதில்லை
மண்ணின் ஆழம் செல்லாமல்
  மனதினில் அமைதி அமர்வதில்லை.

விடியலை நோக்கி!

என்றைக்கும் சற்றும்
குறையாத அதே
பகலிரவு தான் இன்றும்!

எனினும்

இன்றைய பகலின் பங்கை
இரவு திருடிகொண்டதொவென
இன்னமும் ஐயமாய் தானிருக்கிறது!


பட்டென முடிந்துபோன
பகலை விடவும்
பலவாறாய் நீளுமிரவு
படுத்துகிறது.

மூன்றுமுறை விழித்து பார்த்தும்
வானம் விடிந்திருக்கவில்லை


யார் யாரோ கல்லெறிந்து
கலைத்த என் கனவுகளில்
நீ மட்டும்
கவிதை பொழிந்தாய்

உன்முகம் கண்டபோதெல்லாம்
விடிந்துவிட்டதாய்
விளங்கிக்கொண்டது என் தவறு தான்!


சரி

எப்போது விடியும் என் வானம்?

Saturday, September 4, 2010

மரித்தவன் உயிர்த்தேன்

முகம் பார்ப்பதும் - அதிலுன் அகம் பார்ப்பதும் - இந்த
யுகம் முழுவதும் - உன்னால்
சுகம் காண்பதும்

    கனவுகளாய் வந்ததுண்டு என்னில் - ஆனால்
    கதையாகி போனதவை பின்னில்!
***
கண்வைப்பதும் - என்மேல்
மண்வைப்பதும் - வெந்த
புண்மீது தீயை
பெண்வைப்பதும்

    எத்தனை நாட்கள் தான் போகும் - இங்கே
    என்னுயிர் தாபத்தில் வேகும்!
***
மோகங்களே - சுகத்தின்
போகங்களோ? - என்னை
நாகங்களாய் - கொல்லும்
யாகங்களோ?

    ஒருபோதும் அடங்காத நெஞ்சும் - அடி
    ஓயாமல் உன்மனதை கெஞ்சும்!
***
பூவைத்தபின் - நெஞ்சில்
தீவைப்பதா? - அந்த
தீவைப்பதும் - பெண்ணே
நீவைப்பதா?

    நிச்சயம் நானன்று மரித்தேன் - நிலவே
    நினைவினில் நீவந்தாய் உயிர்த்தேன்!

Wednesday, June 16, 2010

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அன்பென்ற சொல்லுக்கு
அடிமை செய்தல் என்றுமா அர்த்தம்?

நேசித்து கொல்லுவதை
நேரில் அனுபவித்த வலி.

கண்ணை தின்று
கண்ணனை கொன்று
களியாட்டம் ஆடும் வெறி

வாழ்வை தொலைக்க
காட்டிய ஆர்வம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!